355 தீர்மானங்களை நிறைவேற்றியதே வட மாகாணசபையின் 4 வருட சாதனை!! : அவைத்தலைவர் சிவஞானம் பெருமிதம்

Friday, April 7th, 2017

வடக்கு மாகாண சபையில் இதுவரை 355 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் சபையின் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சபை உறுப்பினர்கள் அவ் அறிக்கைகளை பார்வையிட முடியும் என்று வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் 90ஆவது அமர்வு நேற்று(06.04.2017) நடைபெற்றபோதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார். நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 355 தீர்மானங்களில் வடக்கு மக்களின் நலன் சார்ந்த தீர்மானங்கள் எத்தனை அதில் உள்ளடங்குகின்றன என்றும் அவற்றில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எத்தனை என்பதையும் தெளிவுபடுத்த முடியுமா? என்று கேட்கப்பட்டபோது அவைத் தலைவர் அக்கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச்சென்றார்.

2

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நூலகத்திற்குச் சென்று பார்வையிட முடியும். அவ்வாறு இருக்கையில் இதுவரை வடக்கு மாகாணசபை என்ன? செய்தது என்று எம்மை நோக்கி கேள்விகளைக் கேட்பது அர்த்தமற்றதாகும் என்று தெரிவித்த அவைத் தலைவரிடம் 355 தீர்மானங்களை நிறைவேற்றியதைத் தவிர வடக்கு மக்களுக்கு பயனுள்ளதாக வடக்கு மாகாணசபையால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எவை? என்ற கேள்விக்கும் அவைத் தலைவர் பதிலளிக்கவில்லை.

3
வடக்கு மாகாணசபையின் ஒரு அமர்வுக்கு யாழ்ப்பாணத்தின் நட்சத்திர விடுதி ஒன்றிலிருந்து 5 லட்சம் ரூபாவுக்கு உணவுச் செலவு செய்யப்படுவதாக ஏற்கனவே விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணசபையின் வரையாறைக்குள் உள்ளடங்காத நூற்றுக்கும் மேற்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்களும் அந்த 355 தீர்மானங்களில் உள்ளடங்கியிருப்பதாகவும் மத்திய அரசால் மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதி உரியவாறு செலவு செய்யப்படாமல் திறைசேரிக்கு திரும்பிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை என்ன? செய்தார்கள் என்ற கேள்விக்கு “நாங்கள் 355 தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை ஆவணப்படுத்தி நூலகத்தில் அடுக்கி வைத்துள்ளோம்” என்று கூறுவதுதான் அவர்களின் பதிலாக இருக்கின்றது என்பதைப் பார்க்கும்போது உருப்படியாக எதையும் செய்யாத வடக்கு மாகாணசபையில் நான்கு வருடமாக அவைத் தலைவர் யாருக்கு தேனீர் ஊற்றிக்கொண்டிருக்கின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றது.