32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம்முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயினை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Friday, July 1st, 2022நாட்டிலுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக ஜூலை மாதம்முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு பொருளாதார நிவாரணமாக வழங்குவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு, நோயாளர்களுக்கான கொடுப்பனவு உட்பட கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களுக்கு மேலதிகமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 1 மில்லியன் குடும்பங்கள் உள்ளடங்கும் வகையில், 32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம்முதல் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சமுர்த்தி உள்ளிட்ட உதவிகளை பெறும் குடும்பங்கள் பெற்று வரும் கொடுப்பனவுகளை 7 ஆயிரத்து 500 ரூபாக அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறான நிவாரண உதவிகளை பெறாத குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாவை அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|