3,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
Sunday, February 12th, 2017
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலையின் தளம்பலை நிவர்த்தி செய்ய சுமார் 3,000 மெற்றிக் தொன் அரிசியை அடுத்தவாரமளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய தலைவர் ரொஹான் த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 3,000 மெ. தொ அரிசியும் நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச விற்பனை நிலைய வலயமைப்பினூடாக விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்காக அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக ச.தொ.ச ஊடாக அரிசியைக் கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. எனவே, சதொசவுக்கு வரும் நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த 3000 மெ. தொன் அரிசியை சதொச ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை நாட்டுக்குத் தேவையான அரிசியில் சுமார் 20 வீதம் முதல் 25 வீதம் வரையிலான அரிசியை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவே பெற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. எனவே சதொசையை நாடிவரும் நுகர்வோருக்கு அரிசியை பெற்றுக்கொடுக்கவேண்டியதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாட்டிலுள்ள தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்காததால் சதொசையை நாடிவரும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே சில சதொச விற்பனை நிலையங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவது காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இதனை நிவர்த்திக்கும் நோக்குடனேயே 3,000 மெ. தொ அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் சதொச தலைவர் தெரிவித்தார்.
Related posts:
|
|