3 000 உதவி ஆசிரியர்களுக்கே நியமனம் வழங்கக் கோரிக்கை – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
Wednesday, November 29th, 2017
நாடெங்கும் பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நிலையில் நீணடகாலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் 3000 க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சைக் கோரியுள்ளது.
இது பற்றி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவிக்கையில்;
புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கல்வி அமைச்சு நீண்டகாலமாக உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோருக்கு நிரந்தர நியமனம் வழங்காமலிருப்பது அநீதியானது.
பயிலுனர் ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 10,000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட அவர்கள் கொடுப்பனவு அதிகரிப்பு எதுவும் வழங்கப்படாத நிலையில் நீண்டகாலமாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றார்கள்.
கொடுப்பனவு அதிகரிப்பைக் கோரியும் நிரந்தர நியமனத்தைக் கோரியும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் கல்வி அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் அவற்றில் எதுவுமே அவர்களுக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர், தற்போது இறுதியானதொரு கோரிக்கையை மூன்று வாரங்கள் கால அவகாசத்துடன் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|