3 நாட்களில் வீட்டை வந்தடையும் கடவுச்சீட்டு – 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவிப்பு!

Tuesday, May 23rd, 2023

மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இம்முறையின் ஊடாக விண்ணப்பதாரர் ஒருவர் தனது கடவுச்சீட்டை 3 நாட்களுக்குள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, எதிர்வரும் மாதத்தில் புகைப்படம், கைரேகை போன்றவற்றை சேகரிக்க, 50 பிரதேச செயலகங்களில் பிரத்தியேக கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதன்பிறகு எவரும் பத்தரமுல்லைக்கு வரத் தேவையில்லை. மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்படும்.

மேலும், எதிர்காலத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஆராய அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு (இ-பாஸ்போர்ட்) வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: