2500 தண்டம் குறைந்தபட்ச வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்காக அல்ல – நிதி அமைச்சர்!

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ.2500 தண்டப்பண யோசனை முன்வைக்கப்பட்டது, சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்தும் குற்றச்சாட்டுக்களுக்கே தவிர, குறைந்தபட்ச வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்காக அல்லவென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று(15) நண்பகல் இடம்பெற்ற, வரவு செலவுத் திட்ட செயலமர்வொன்றில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
வாகனமொன்று கோடு தாண்டிப் பயணித்தல், பொருத்தமற்ற இடத்தில் நிறுத்தி வைத்தல் போன்ற குற்றங்களுக்காக குறித்த இந்த தண்டப் பணத்தை முன்மொழியவில்லையெனவும் அவ்வாறு செய்வதற்கு அரசாங்கத்துக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தைப் பாதுகாக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அவசியம் எனவும் இதற்காக தண்டப் பணத்தை அதிகரிப்பதற்கு தேவைப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், அமைச்சரவையின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. வாகனங்கள் சம்பந்தப்பட்ட தவறுகளுக்கு மாத்திரமன்றி, ஏனைய துறைகளுக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|