25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது – சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Thursday, December 2nd, 2021

நாட்டில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் 25 வீதமான தனியார் பேருந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுபுறத்தில் தரம் குறைந்த எரிபொருளை அரசாங்கம் இறக்குமதி செய்வதாக குற்றம் சுமத்துகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவிற்கு விற்பனை செய்பய்படுவதுடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணை 77 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலை வித்தியாசம் காரணமாக அநேகமான தனியார் பேருந்துகள் மண்ணெண்ணையைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அரசாங்கம் தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதி செய்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இறக்குமதி செய்யும் அதே எரிபொருட்களையே தனியாரும் பயன்படுத்துகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அரசாங்க பேருந்துகள், ரயில்கள், மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் என்பனவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, டீசலை பயன்படுத்துவதன் மூலம் தனியார் பேருந்து என்ஜின்கள் மட்டும் பழுதடையக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் பயன்படுத்த வேண்டிய என்ஜின்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மண்ணெண்ணை பயன்படுத்தினால் அவை பழுதடையும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: