2024 இற்குள் அனைவருக்கும் நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்.

2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமர் முதலில் நினைவு பலகையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை செயற்படுத்தி, களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க அவர்களினால் 2021-2025 காலப்பகுதிக்கான நீர் வழங்கல் சபையின் குறிக்கோள் மற்றும் திட்டங்களை சுட்டிக்காட்டும் கூட்டுத்திட்டம் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது.
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைய 2025 இற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஏற்ப இது செயற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மக்கள் இதன் மூலம் பயனடைவதுடன், இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூபாய் 32 ஆயிரத்து 700 மில்லியன் ஆகும்.
இதன் மூலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய நீர் இணைப்புகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இது 320 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 17 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Related posts:
|
|