2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 13th, 2022

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 80% வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படமாட்டாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியில், 80% பாடசாலை நாட்களில் வருகைப் பதிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

இருந்தபோதிலும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா, போக்குவரத்து சிரமம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, டிசம்பர் 2022 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு பல தீர்மானங்களை எடுத்துள்ளது.

இதன்படி, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் வட்டியில்லா கடன் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்த கால எல்லை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019/2020 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2022.08.12 என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஒரு உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு 30 ரூபா 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர். தற்போது 7,920 பாடசாலைகளில் 1.1 மில்லியன் மாணவர்கள் இந்த நன்மைகளைப் பெற்று வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

000

Related posts: