2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாட்டின் வறுமை ஒழிப்புக்கு ஆரம்ப புள்ளியாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தை முழுமையாக வரவேற்பதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான 02 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
இம்முறை சிறந்தவொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் வறுமை நிலையை ஒழிக்கும் வகையிலான வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது.
வரலாற்று காலத்தை எடுத்துக் கொண்டால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருந்தன.
ஆனால் அதற்கு பின்னரான அரசாங்கம் அதனை இல்லாம் செய்து திறந்த பொருளாதார நிலைமையை கொண்டு வந்திருந்தது. இதனால் பொருளாதார நிலைமையில் நெருக்கடி நிலைமையில் நாடு இருக்க காரணமாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா எமது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 45 வருடங்களாக நாங்கள் எமது நாட்டுக்குள் செய்ய வேண்டிய உற்பத்திகளை செய்யாத காரணத்தினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
எமக்கு தேவையான 95 வீத உணவுகளை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும். இதன்படி இந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களை வரவேற்க வேண்டியுள்ளது. எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் விடயங்கள் இந்த அரசாங்கத்தின் திட்டங்களுக்குள் உள்ளன.
எவ்வாறாயினும் இந்த வரவு – செலவு திட்டத்தை வறுமையை முடிந்தளவுக்கு இல்லாமல் செய்வதற்கான திட்டமாகவே பார்கின்றேன்.
நீண்ட கால பொருளாதார கொள்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளினாலேயே நாடு இன்றைய வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|