2017 இல் மின்சாரம் தாக்கி நாடு முழுவதும் 106 பேர் சாவு!

Thursday, July 26th, 2018

மின்தாக்குதல்களில் உயிரிழப்போர் தொகை அதிகரிக்கின்றது. எனவே மின்சார உபகரணங்களுக்கான தேசிய நியமம் ஒன்றையும் அறிமுகம் செய்யத் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

மின்சார விபத்துக்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி அறிவூட்டும் செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அது தெரிவித்தது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மின் தாக்குதல் பாதிப்புத் தொடர்பிலான ஆய்வில் கடந்தவருடம் நாடு முழுவதும் 106 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு முதல் வருடம் 98 பேரும் 2015 இல் 95 பேரும் 2014 இல் 74 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத மின்இணைப்புகளை பெறுவது போன்ற முறைகேடான செயற்பாடுகள் மின் தாக்குதல் உயிரிழப்புகளுக்குப் பெருமளவில் காரணமாக இருக்கின்றன. அவற்றைத் தடுப்பதற்கு மின்சாரப் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

தேசிய தொழில்தகைமைப் பரீட்சையில் தரம் மூன்றில் சித்தியடைந்த மின்சாரப் பணியாளர்களுக்கே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். தற்போது மின்சாரப் பணியாளர்களாகச் செயற்படுபவர்களில் அந்தத் தகைமையைப் பெற்றிராதவர்கள் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் சித்தியடைய வேண்டும். மின்சாரப் பணியாளர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு இந்தப் பரீட்சைகளில் சித்தியடைவது கட்டாயமாக்கப்படும்.

அதேவேளை புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மின்சார உபகரணங்களுக்கான தேசிய நியமத்தின் பிரகாரம் 5 அம்பியர், 15 அம்பியர் மின்செருகிகள் மற்றும் மின்குதை குழிகள் என்பன தடைசெய்யப்படவுள்ளன. அவற்றுக்குப் பதிலாக 13 அம்பியர் மின் செருகிகள், மின்குதை குழிகள் என்பவற்றையே பயன்படுத்த வேண்டும்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு பின்னர் உரிய நியமங்களுக்கு பொருந்தாத மின்னுபகரணங்களின் ஏற்றுமதி இறக்குமதி விற்பனை என்பன முற்றாகத் தடை செய்யப்படும்.

தற்போது வீடுகளில் பாவனையில் உள்ள 5 அம்பியர், 15 அம்பியர் மின்செருகிகள் மற்றும் மின்குதைகுழிகளின் ஆயுட்காலம் முடியும் வரை அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை. எனினும் எதிர்வரும் காலங்களில் முறையற்ற மின்னுபகரணப் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலமாக மின்சார ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts: