20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Thursday, October 15th, 2020

நாட்டில் தற்போது பேசுபொருளாக உள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆளும் கட்சியின் சில தரப்பினர் முன்வைத்துள்ள எதிர்ப்பு தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர். அதில் உள்ள சில விடயங்களை மாத்திரமே அவர்கள் எதிர்க்கின்றனர்.

இதனை தவிர நாட்டு மக்களின் ஆணையில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ஜனாதிபதி, பொதுமக்களின் எதிர்பார்க்கும் அளவுக்கு நாட்டை முன்னேற்றி முன்நோக்கி கொண்டு செல்ல அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் விவாதங்கள் இல்லை. அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில வித்தியாசங்கள் தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்த திருத்தச் சட்டம் தொடர்பாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமல் வீரவன்ச ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அரசை விட்டு வெளியேறலாம் என்றும் தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: