20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் –  தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலர் !

Tuesday, May 8th, 2018

வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரி பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் 20 000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜீன் மாதம் நியமனம் வழங்கப்படுமென தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ன தெரிவித்தார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் நாடளாவிய ரீதியில் 57,000 வேலையற்ற பட்டதாரிகள் பதிவு செய்திருந்தனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஏப்ரல் 21 முதல் 30 வரை மாவட்ட செயலகங்கள் தோறும் இடம்பெற்றுள்ளது.

நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர் பயிற்சியாளராக மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள் காரியாலயம் என்பனவற்றில் ஒருவருட பயிற்சிக்காக இணைக்கப்படுவர்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக இணைக்கப்படும் இவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் மேலதிக செயலாளர் அசங்க தயாரட்ன மேலும் தெரிவித்தார்.

31.12.2016 ஆம் திகதி வரை பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகள் மாத்திரம் இவ்வாறு நியமனம் பெற உள்ளனர். ஏனையோருக்கு மாகாண சபைகள் மூலம் நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வங்கி ஏற்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: