20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, September 28th, 2020

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்கள் குறைபாடுகளுடன் கூடிய என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று சட்டத்தரணி எஸ்.டி.ஜயநாக தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய சட்டத்தரணிகள் சங்கம் சட்டத்தரணி எஸ்.டி.ஜயநாக தலைமையில் குழு ஒன்றை நியமித்திருந்தது. இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

20ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு கிடைக்கும் சிறப்புரிமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் இலங்கை ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.

மக்களிடம் இறையாண்மை உள்ளது. இதனால், ஜனாதிபதி உத்தியோகபூர்வ செயல் ஒன்றை அடிப்படையாக கொண்டு மக்களின் அந்த இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுமாயின், ஒருவரது அடிப்படை உரிமை மீறப்படுமாயின், ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று சட்ட நிவாரணத்தை பெற நேரிடும். அந்த வசதி இருக்கின்றது. தற்போதும் அது இருக்கின்றது. அதனை 20ஆவது திருத்தச் சட்டத்தில் நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்திற்கு செல்லும். இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும். செவ்வாய்கிழமைமுதல் உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரிக்கும். இதனடிப்படையில் சட்டத்தரணிகள் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளும் ஒரு நபரின் விருப்பத்திற்கு அமையவே நியமிக்கப்படுவார்கள். ஜனாதிபதியே நீதிபதிகளை நியமிப்பார். தன்னிச்சையான நியமனங்கள் வழங்கப்படலாம். ஜனாதிபதி தான் விரும்பிய நீதிபதிகளை நியமிக்கலாம். விருப்பமில்லை என்றால், காரணத்தை கூறி அவர்களை நீக்கவும் முடியும். காரணம் என்ன என்று கூறப்படவில்லை.

அத்துடன் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும். நிதி தொடர்பான அதிகாரமும் பறிபோகும். நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் 17ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தனர். 18ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். இதன் பின்னர் 19ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். தற்போது 20ஆவது திருத்தச் சட்டத்தையும் இவர்கள் ஆதரிப்பார்கள் என எஸ்.டி. ஜயநாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: