19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Thursday, September 3rd, 2020

முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கும் போது நேரடியாக செயற்பாடுகளை முன்னெடுக்காத காரணத்தினால் ஏற்பட்ட சம்பவத்திற்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் சிறந்த உதாரணம். பாதுகாப்பு அமைச்சராக நேரடியாக செயற்பட முடியாத காரணத்தினால் இந்த தாக்குதல் நடந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதிக்கு மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுக்களுக்கே அதிகாரம் உள்ளது. ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளமை 19வது திருத்தச் சட்டத்தில் நடந்த மிகவும் பயங்கரமான நிலைமை. இது சம்பந்தமான புரிதல் இல்லாத சிலர் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்குவது மிகப் பெரிய தவறு கருதுகின்றனர் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதி எந்த அமைச்சு பதவிகளையும் வகிக்க முடியாது என்றாலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொறுப்பின் கீழேயே பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகிறது.

இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: