19 கிராம அலுவலர் பிரிவுகளில் 10 கிராம அலுவலர்கள் வெற்றிடங்கள்!

Friday, May 18th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளில் பத்து கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாது காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு கிராம அலுவலர் பிரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் இங்கு ஒரேயொரு கிராம அலுவலர் மட்டுமே சேவையாற்றி வருவதனால் மக்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதேவேளை கிராம அலுவலரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார். எனவே குறைந்தது இரண்டு கிராம அலுவலர்களையும் நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில் – 19 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ள இப்பிரதேசத்தில் பத்துக் கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதனால் ஒரு கிராம அலுவலர் இரண்டு அல்லது மூன்று பிரிவுகளில் கடமையாற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது. தற்போது நடைபெற்ற போட்டிப்பரீட்சையில் இந்தப் பிரதேசத்தில் எட்டுப்பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் பின்னரே நியமிக்க முடியும். தற்போது உள்ள நிலைமையில் ஒரு கிராம அலுவலர் விடுமுறையில் செல்லும் சந்தர்ப்பத்தில் மற்றுமொரு கிராம அலுவலர் ஐந்து அல்லது ஆறு பிரிவுகளைக் கவனிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: