19 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச 19 ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அத்துடன் தற்போதைய நிலையை வெற்றி கொள்வதற்கு பொருளாதார முகாமைத்துவம் அவசியமாகும்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட வெவ்வேறு சர்வதேச தரப்புகளுடனும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ஸ்த்திரநிலை அவசியமாகும்.

இதற்காக விரைவானதும், நடைமுறை சாத்தியமானதுமான அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால் இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடி ஆகியவை நம் கண்களுக்கு புலப்படும் சிரமங்களாகும். இதன் காரணமாக இன்று மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நான் அறிவேன்.

இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மக்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை உண்மையாக நேசிப்பவர் யார் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எமது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியாது, இந்த நெருக்கடியை போக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டும்.

எமது அரசியல் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு முன், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சியினரை மனதார அழைக்கின்றோம். அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாகும் என்பதை நினைவூட்டுகின்றேன்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க பொருளாதார முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது. அதற்காக மக்கள் போன்றே இச்சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடின்றி மதிப்பிடப்படும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் சர்வதேச அனுபவமுள்ள மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். முன்னதாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களின் பெறுமதியான யோசனைகளை எடுத்து தேவையான தலையீடுகளை செய்ய முன்வந்தோம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்..

இரண்டு நாட்களில் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று சொல்வதை விட, நம்மால் முடிந்த வரையில் தீர்வு காண்பதுதான் முக்கியம். மின்வெட்டை நிமிடத்திற்கு நிமிடம் குறைக்கிறோம்.

எதிர்வரும் சில வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் தேவையில்லை.

அன்றாட வாழ்வில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய வலியை அறிந்து, இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்கிறோம். 24 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்களை இனிமேலும் நாங்கள் வரிசையில் காத்திருக்க வைக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதன் முதல் படியாக, அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை அத்தியாவசிய மற்றும் சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான மிக சரியான தீர்வாகும் என்று நான் நம்புகிறேன்.

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன், நாம் ஒரு விரிவான புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கி நகர வேண்டும். அதற்கான எமது முயற்சிக்கு கட்சி பேதமின்றி உங்கள் அனைவரதும் ஆதரவும், மக்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: