19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

Saturday, August 29th, 2020

19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதில் மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் நியமிக்கப்பட்ட குழு இரண்டு வாரங்களில் தனது அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் குறித்து ஆராயவும் மாற்றப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும் அரசாங்கம் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் குழு ஒன்று நியமித்திருந்தது.

இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த திட்டங்கள் அடங்கிய வரைவு இரண்டு வாரங்களில் பரிந்துரைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அமைச்சரவை அவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ந்து 20 ஆவது திருத்தத்தில் இணைக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பரிசீலனை செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பாதுகாப்பு போன்ற அமைச்சு பதவிகளை வைத்திருப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பான 19 வது திருத்தத்தில் உள்ள தெளிவின்மையை சரிசெய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ன.

19 வது திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் மற்றும் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது குறித்து தொடர்ச்சியான கலந்துரையாடல்களை தேர்தல்களில் அரசாங்கத்தை ஆதரித்த தரப்பினர் மேற்கொள்ளவுள்ளனர்.

முன்பதாக 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 திட்டத்தின் மூலம் 19 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது ஒரு வருடம் கழித்து நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறித்திருந்தது.

மேலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உறுப்பினர்களை நேரடியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் இது இரத்து செய்திருந்தது.. இதன் காரணமாக தற்போது பிரதமருடன் கலந்தாலோசித்து மட்டுமே அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும்.

எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு அமைச்சு பதவிகளை ஒதுக்குவது ஜனாதிபதியின் விருப்பப்படியே என்றாலும் 19 ஆவது திருத்தத்தின் காரணமாக அதன் ஆளுகை முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: