19 ஆவது திருத்தத்தை இரத்து : 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 19th, 2020

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை இரத்து செய்வதற்கும், 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடமபெற்றபோதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை அறிக்கை இன்று நடைபெறும் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி முன்பு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ரத்துசெய்து அதை 20 வது திருத்தத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்

“நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் 19 ஆவது திருத்தத்தின் உட்பிரிவுகள் அகற்றப்பட்டு திருத்தப்படும். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய 20 வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவோம் என்று நம்புகிறோம்” என்றார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கான வரைவு திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும், அதே நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார்.

தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் குறித்து கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், 20 ஆவது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை பாதிக்காது என்றும், அது தொடர்ந்து செயற்படும் என்றும் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள மாதங்களுக்கான அரச நிதியை ஒதுக்கும் இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: