180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 10th, 2021

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கொரேனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை, கட்டுமானத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை, விவசாய ஏற்றுமதித்துறை மற்றும் சுகாதார சேவைகள் போன்ற துறைகளுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்காக ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியால் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டு, இலங்கை கொவிட் 19 அவசர மற்றும் பதிலளிப்பு வசதியளித்தல்களின் கீழ் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பங்குபற்றலுடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் குறித்த துறைகளின் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்குத் தேவையான திரவப்பண வசதிகளை அதிகரிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திட்டத்தின் கீழ் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளுக்கு தலா 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட இரண்டு கடன்தொகை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இரண்டு வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு உபகடன் வசதிகள் வழங்கப்படும்.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவும் மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்தராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: