17 இலட்சம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பெருமிதம்!

Monday, March 25th, 2024

17 இலட்சம் ஆரம்ப வகுப்பு  மாணவர்களுக்கு காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் ; –

பின்தங்கிய  பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இந்த உணவுத்  திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டுமுதல் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக 16,600 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளார்.மேலும், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மூலமாகவும் உதவி பெறப்படுகிறது. அதன்படி, 17 இலட்சம் ஆரம்ப வகுப்பு  மாணவர்களுக்கும் காலையில் போசாக்குள்ள உணவு வழங்குவது சாத்தியமாகியுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் போசாக்குள்ள உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்விகற்பிப்பதற்கு முன்னர் அனைத்து மாணவர்களின் வயிற்றையும் நிரப்புவதன் மூலம்,  சிறப்பாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள், இது மாணவர்களின் மன நிலையை சீர்செய்யவும் உதவுகிறது.

கடந்த மாதம் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் சீருடைகள் சரியான நேரத்தில் வழங்கப்பட்டன. இன்று முதல் போசாக்குள்ள உணவு வழங்கப்படும்.ஆனால் இதற்கு ஊடகங்கள் மூலம் கிடைத்த பிரசாரம்  மிகவும் குறைவு.பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: