16 – 19 வயதுக்கிடைப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, November 19th, 2021

நாட்டில் இதுவரை 16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 4 இலட்சம் மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றி நிறைவுசெய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், சிறுவயதுமுதல் நாட்பட்ட நோய்களுக்கு உள்ளான மற்றும் ஏனைய நோய்களுக்கு உள்ளான 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 27 ஆயிரம் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் முதலான சுகாதார பழக்கவழக்கங்களினால், கொவிட் தொற்று ஏற்படுவதை பெரும்பாலும் தடுக்க முடியும் எனப் புதிய ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை, பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொவிட் பரவல் மீள அதிகரித்துள்ள நிலையில், இந்தப் புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

முகக்கவசம் அணிவதால், கொவிட் தொற்று ஏற்படுவதை அரைவாசியாக குறைக்க முடியும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கைகழுவுதல் மூலம், கொவிட் தொற்றைத் தடுக்க முடியும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியைப் பேணுதல், கொவிட் தொற்று ஏற்படும் அபாயத்தை நான்கில் ஒரு பகுதியளவு தடுப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றம் மாத்திரம் கொவிட்-19 தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு போதுமானதல்ல என்பதும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையை முன்வைத்துள்ள அவுஸ்திரேலிய மொனேஸ் பல்கலைக்கழகத்தின், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி ஸ்டெலா டெலிக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு வீராங்கனைகளின் பெற்றோர் மூன்று நாள்கள் அவகாசம்
சம்பந்தன் வேண்டுகோள் – சுமந்திரனால் அழைக்கப்பட்ட கூட்டத்தை நிராகரித்தனர் பங்காளிகள் – தமிழ் தேசிய கூ...
சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது -.அமைச்சர் டிரான் அலஸ் தெரிவ...