13 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார உதவிகள் கோரும் கிளிநொச்சி அரச அதிபர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பதின்மூவாயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளை வழங்கவேண்டிய தேவையுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வாழ்வாதார வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த கால அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இதுவரை நாற்பத்தி ஓராயிரத்து 934 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.இவ்வாறு மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பல்வேறு தேவையுடைய குடும்பங்களாகவே காணப்படுகின்றன.
இதில் பதின்மூவாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை அவசரமாக வழங்க வேண்டிய தேவையுள்ளது. தற்போது மீள்குடியேற்ற அமைச்சினூடாக 1,600 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளன தற்போது இதற்கான வேலைத்திட்டங் கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக சுமார் 14,000 ஏக்கர் வரையான சிறுபோக செய்கை நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது அத்துடன், கால்நடை வளர்ப்பினை மேம்படுத்துவதற்கு மாவட்டத்தில் 500 ஏக்கர் வரையான மேய்ச்சல் தரவைகளை ஏற்படுத்த வேண்டிய நிலையில் இதனை அளவீடு செய்து வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட மூன்று மில்லியன் ரூபா நிதி தேவையாகவுள்ளது
இவ்வாறு மக்களுக்கான சேவைகளை வழங்கக் கூடிய திட்டங்களைத் தயாரித்து அதன் மூலம் தமது சேவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|