12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Sunday, August 22nd, 2021

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர்.

தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயம் குறித்து கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னிலை சுகாதார சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை செலுத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

60 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்கள் தொடர்பில் உடனடியாக அறியத்தருமாறும் இராணுவத் தளபதி, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறானவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை ஏற்ற தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

Related posts: