110 அரசாங்க நிறுவனங்களுக்கு விருது !

Thursday, February 27th, 2020

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைக்கு அமைய 2018 ஆம் ஆண்டில் உயர்ந்த வினைத்திறன் மட்டத்தை அடைத்த நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் நாளை (28) பாராளுமன்றத்தில் நடைபெறும்.

2018 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நடவடிக்கை எடுத்திருந்தார்.

2018 ஆம் ஆண்டில் 844 நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய அரசாங்கத்தின் விசேட செலவுப் பிரிவு, அரசாங்க அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், மாவட்ட செயலக அலுவலகங்கள், மாகாண சபை நிதியங்கள், மாகாணசபை அமைச்சுக்கள், திணைக்களங்கள், விசேட செலவுப் பிரிவு, உள்ளூராட்சி அதிகாரசபைகள், மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

எட்டாவது பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் திட்டத்துக்கு அமைய அரசாங்க நிறுவனங்களில் நிதி மற்றும் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் நோக்கில் அரசாங்க, மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு முதல் கணனி மயப்படுத்தப்பட்ட முறையின் ஊடாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே 2018 நிதியாண்டுக்குரிய நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை கணனி வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளும் மதிப்பீடுகள் முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளன. இந்த மதிப்பீட்டின் ஊடாக 2015 ஆம் ஆண்டு கிடைத்த பலன் 64 வீதமாக காணப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு இது 78 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தப் பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று அரசாங்க நிறுவனங்களை நெறிமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: