100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவுக்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து – 70 வீத எரிவாயுவை வீட்டுப்பாவனை நுகர்வுக்காக வழங்கவும் உறுதி!

Thursday, June 30th, 2022

100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளது.

உலக வங்கியுடனான குறித்த ஒப்பந்தத்தில், லிட்ரோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் முதித்த பீரிஸ் கைச்சாத்திட்டுள்ளார்.

இவ்வாறு பெறப்படவுள்ள 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவின் பெறுமதி 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், அதற்கு உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதுடன், மீதமுள்ள 20 மில்லியன் அமெரிக்க டொலர் லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயு கையிருப்பு சுமார் நான்கு மாத காலத்திற்கு நாட்டின் பாவனைக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு கையிருப்பில் 70% வீட்டுப்பாவனை நுகர்வுக்காக வழங்கப்படும் என்றும் இதில் 12.5 கிலோ கொண்ட 5 மில்லியன் கொள்கலன்களும், 5 கிலோ எடைகொண்ட ஒரு மில்லியன் கொள்கலன்கள் மற்றும் 2.3 கிலோ கொண்ட ஒரு மில்லியன் கொள்கலன்களையும் பெற்றுக் கொள்ள மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், எஞ்சிய 30% எரிவாயு கையிருப்பு வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளது.

மேலும், 20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 மெட்ரிக் டன் எரிவாயுவின் முதல் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

000

Related posts: