1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் – தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, September 27th, 2020

தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாகக் கூறி தேயிலை தோட்ட தொழிலார்களுக்கான 1,000 ரூபாய் என்ற நாளாந்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறினால் தோட்டக் கம்பெனிகள் அரசாங்கத்தினால் கையப்படுத்தப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்கள், தோட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முதலாளிகளின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் அந்த தோட்டங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட நிறுவனங்களுக்காக அரசாங்கத்தால் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், தோட்ட வீடுகள், வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தோட்ட நிறுவனங்கள் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தும் அதேவேளை பல தோட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கத் தவறிவிட்டன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பதாக தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என பெப்ரவரியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார். அத்தோடு ஜனாதிபதி தேர்தலின்போதும் கோட்டாபய ராஜபக்ஷ அதையே உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: