100 சீன தொழிற்சாலைகளை ஹம்பாந்தோட்டையில் நிறுவுவதற்கு வாய்ப்பு!

Wednesday, May 11th, 2016

சர்வதேச நாயணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 300 மில்லியன் டொலரும் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இலங்கைக்க சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கவுள்ளதாகவும், அதனூடாக தாம் சிறந்த நிலைக்கு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சர்வதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர் அடுத்த ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார நிலைமை வலுவான நிலைக்கு வரும் என தாம் நம்புவதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் நாட்டில்  உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலை, இறப்பர் போன்றவற்றின் கேள்வி சர்வதேசத்தில் தற்போது குறைவடைந்துள்ளமையினால், இலங்கை வேறொரு திசையை நோக்கி நகர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம், நிதிசார் துறைகள், கட்டட நிர்மாணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு மத்திய நிலையமாக மாற்றுவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், ஹம்பாந்தோட்டையில் சீனாவின் 100 தொழிற்சாலைகளை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுகர்வுகள் அதிகரித்துள்ள நபர்களுக்கு பெறுமதி சேர் வரி அதிகளவில் அறவிடப்படுவதாகவும், நுகர்வுகள் குறைந்தளவானோருக்கு பெறுமதி சேர் வரி குறைந்தளவில் அறவிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் 70 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை நாளொன்றுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால் முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை வலுப்பெற செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீருக்கு வரி அறவிடப்படுகின்றமை குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும், நீருக்கு வரி அறவிடுவதற்கான எண்ணம் தமக்கு கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மின்சாரம் மற்றும் நீர் போன்றவற்றை இந்த வரிக்குள் உள்வாங்குவதற்கான எண்ணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கல்வி மற்றும் சுகாதார துறைகள் இலங்கையில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது அந்த துறைகள் தனியார் வசம் சென்றுள்ளதாகவும் நினைவூட்டியுள்ளார்.

இலவச சேவையை வர்த்தக நடவடிக்கையாக மாற்றியுள்ள தனியார் துறையிடமிருந்து வரி அறவிடப்படுகின்றமை நியாயமானது எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: