17ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்!

Sunday, October 6th, 2019


இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

யாழ். விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ். விமான நிலையம் இப்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. யாழ். விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ஆம் திகதி வரவுள்ளது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சேவைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு எயார் இந்திய விமான சேவை விமானங்களும் வரவுள்ளன. இலங்கையில் இருந்தும் தனியார் விமான நிறுவனங்கள் இரண்டு தமது சேவைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். கொழும்பு இரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: