ஒபாமாவை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி?

Monday, April 18th, 2016

ஜீ–-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பை ஒழுங்குபடுத்தும், இராஜதந்திர முயற்சிகள், கொழும்பிலும், வாஷிங்டனிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் ஷிமா நகரில், அடுத்த மாதம் 26, 27ஆம் திகதிகளில், ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியட்நாம் பிரதமர் ஆகியோருக்கு ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

அந்தவகையிலேயே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து இருதரப்பு சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜி-7 மாநாட்டுக்குச் செல்லும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 71 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சுக்கு இலக்காகி அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்கும் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இந்த நகரங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் எவரும் இதுவரை சென்றதில்லை என்பதுடன், இந்த தாக்குதலுக்காக மன்னிப்பும் கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: