வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நாள் பிரதி மேயர் றீகன் கண்டனம்!

Saturday, May 4th, 2019

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி ஈ.பி.டி.பி. கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர் கைதானார் என பொலிஸார் தெரிவித்ததாக பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது.

கடந்தகாலங்களைப்போல திட்டமிட்டு எமது கட்சி மீதும் என்மீதும் சேறுபூசும் வகையில் உருவாக்கப்பட்ட செய்தியே இது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றீகன் (இளங்கோ) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (04) பத்திரிகைகள் சிலவற்றில் யாழ்ப்பாணம் மாநகரில் மணத்தறை லேன், நாவலர் வீதி உள்பட பல இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு வேளையில் மூவர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதாகவும் இவர்கள் வீதியில் சென்றவர்களை வாளால் மிரட்டியும் வெட்டியும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், கடைகளுக்குச் சென்று வாளைக் காண்பித்து கொள்ளையிலும் ஈடுபட்டதாகவும் தெரிவித்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் சி.சி.ரி.வி கமராக்களின் பதிவுகளை வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் மறுநாள் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் எனது சகோதரன் என்றும் பொலிஸார்  தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்தவகையில் இச்செய்தியானது திட்டமிட்டவகையில் என்மீதும் எமது கட்சி மீதும் மீண்டும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நான் இன்றையதினம் எனது சகோதரனுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் யாழ்ப்பாணம் மனத உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளேன்.

அதுமட்டுமல்லாது என்மீது திட்மிட்டவகையில் அவதூறு செய்துள்ள இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: