வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் அழைப்பு!

வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை மாலை இரண்டு மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்தில் இடம்பெற்றுவரும் முறையற்ற இடமாற்றங்கள், பழிவாங்கல்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக ஏற்று அங்கீகரிக்கப்பட்ட தாபனவிதிகளையும், சுற்றுநிரூபங்களையும் மதிக்காது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை கண்டித்தும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
செம்மணி வீதி – நல்லூரில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் ஆகிய அலுவலகங்களுக்கு முன்னால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும், பழிவாங்கல் செயற்பாடுகளும் வரம்பு மீறி சென்றுகொண்டிருக்கின்றன.
ஒரு சில அதிபர்கள் மூலமாக ஆசிரியர்களை வற்புறுத்தி விருப்ப கடிதங்கள் போன்று பெற்று முறையற்ற இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
மேலதிக ஆசிரிய ஆளணி என்ற போர்வையில் – இடமாற்ற சபைக்கு தவறான தகவல்களை வழங்கி இடமாற்றங்களை தொழிற்சங்க உறுப்பினர்களைச் கொண்டு செய்வது போலவே இடமாற்ற சபையை தவறாக வழிநடத்தியுள்ளார்.
வலிகாமம் வலயத்தில் தமது எடுபிடிகள் சிலரை வைத்து கொண்டு ஏனைய கல்வி அதிகாரிகளையும், ஆசிரியர் ஆலோசகர்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும், பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளவர்கள் வலிகாமம் கல்வி வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் பங்களிப்பு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒரே பாடசாலையில் ஏழு வருடங்களுக்கு அதிகமாக பணியாற்றியவர்கள் பலர் இருக்கும் போது அவர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் இதுவரை காட்டவில்லை.
தமக்கு சார்பானவர்களை தக்கவைப்பதற்காகவும் தமக்கு வேண்டப்பட்டவர்களின் வேண்டுதல்களுக்காகவும் வலிகாமம் கல்வி வலயத்தின் கல்விக் கட்டமைப்பையே தவறாக வழிநடத்தி வருகின்றார்.
முறையற்ற விதத்தில் இடமாற்றம் வழங்குவதோடு பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தில் உள்ள நிலையிலும், அதனை ஏற்க மறுக்கும் செயற்பாடுகளும் ஆசிரியர்களை பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களின் மூலம், மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எமது சங்கத்தை நாடி வந்தபோது அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த போது அவர்களது பாடசாலைகளுக்கு சென்று அவர்களை அச்சுறுத்துவதுடன், பொய்க்குற்றச்சாட்டுக்களையும் சுமத்த எத்தனித்த விடயங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில் நடைபெற்ற முறையற்ற இடமாற்றங்களை தேர்தல் திணைக்களத்தினூடாக நிறுத்தியிருந்தோம். ஆயினும் தேர்தல் முடிவடைந்த பின்னரும் அவர்களை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார்.
வெளிமாவட்டங்களில் சேவையாற்றி ஆசிரியர்கள் தாம் கோரிய வலயத்துக்கு வெற்றிடம் இல்லை என கூறி வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போது தூர இடங்களில் பணியாற்றி வருபவர்கள் என்ற மனிதாபிமான சிந்தனைகள் இன்றி தூர இடங்களுக்கு பாடசாலைகளை வழங்குவதும், அவர்கள் தமது பிரச்சினைகளை கூறும்போது பொருத்தமற்ற வார்த்தைகளால் ஆசிரியர்களை துன்புறுத்துவதும் நடைபெற்று வந்துள்ளன.
எனவே இத்தகைய செயற்பாடுகள் கல்வி புலத்துக்கு முன்மாதிரியான செயற்பாடாக ஒருபோதும் அமையப் போவதில்லை. எனவே தற்போது இவரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையற்ற இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
முழுமையான விசாரணையொன்று வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதையும், சட்டத்தை மீறி அச்சுறுத்தப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை வடமாகாண கல்வியமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளோம்.
இதற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லையாயின் எதிர்வரும் காலங்களில் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|