வடக்கு – கிழக்கில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, August 31st, 2019


வடக்கு கிழக்கு பகுதிகளிற்காக சுகாதார அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் நேற்று (30) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குப் பெண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.health.gov.lk) ஊடாக மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. உயரம் 4 அடி 10 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பதோடு சகல விண்ணப்பதார்களும் திருமணமாகாதவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மொழி/தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆங்கில மொழி உட்பட ஆறு (06) பாடங்களில் க.பொ.த (சா.த) சித்தியடைந்திருத்தல் மற்றும் 2015, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உ/.தர) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவசியம்.

நிகழ்நிலை விண்ணப்பங்களை 30.08.2019 லிருந்து 20.09.2019 வரை சுகாதார அமைச்சின் www.health.gov.lk இணைய முகவரியூடாகச் சமர்ப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு இன்று வெளியாகும் வர்த்தமானியை (30.08.2019) பார்வையிடவும்.

இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது விண்ணப்பிப்பதற்கு உதவி தேவையானவர்கள் அவர்களது பகுதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாய்சேய் நலனைப் பேணுவதில் முக்கிய பங்காற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அப்பகுதிகளைச் சேர்ந்த தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் அனைவரையும் இந்த அரிய சந்தர்ப்பத்தினைத் தவறவிடாது பயன்படுத்துமாறு சமூக நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: