மக்கள் பணத்தை ஏப்பமிடுகிறது மாநகர சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் “என்ரபிரைஸ் ஶ்ரீலங்காவும்” – யாழ்ப்பாணத்து புத்திஜீவிகள் ஆதங்கம்!

Saturday, September 7th, 2019

யாழ் மாநகர சபைக்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்திற்கான கண்காட்சியும் இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் எடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இவ்விரு நிகழ்வுக்காகவும் 6 கோடிக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது.

வடபகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்களது தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் இவ்வாறு மக்களது பணம் அனாவசியமாக செலவு செய்யப்படுவதானது அரசியல் உள் நோக்கத்துடன் கூடிய ஊழல் மிக்கதாகவும் மக்களது பணத்தை ஏப்பமிடுவதாகவுமே அமைந்துள்ளதாக  புத்திஜீவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது ஒருபறம் இருக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு யாழ். மாவட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்த போதிலும்கூட அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் எதிர்பார்த்தளவுக்கு மக்கள் வருகைதரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“என்ரபிரைஸ் ஶ்ரீலங்கா” மற்றும் யாழ் மாநகர சபையிக்கென புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரதமர் இன்றையதினம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ். மாநகரசபை மைதானத்தில் குறித்த இரு நிகழ்வுகளும் பெரும் எடுப்பில் கோடிக்கணக்கான நிதி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்வுகளுக்காக இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்தளவிற்கு மக்களின் வருகை இருக்கவில்லை என்று இதன்காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்பாட்டாளர்கள் மீது கடும் விசனம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேடைக்கு முன்பாக மைதானத்தில் போடப்பட்டிருந்த கதிரைகள் மக்கள் இல்லாது வெற்றுக் கதிரைகளாக இருந்ததாகவும் அக்கதிரைகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களும் காலை உணவுக்காக வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளும் மட்டுமே இருந்தததையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்வகளில் அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அரச உத்தியோகத்தர்களுமே அங்கிருந்த கதிரைகளில் அதிகளவாக அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் பெரிதும் அக்கறையுடன் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகின்றது.

இது இவ்வாறிருக்க 2,350 மில்லியன் ரூபா செலவில் மாநகரசபை கட்டடம் அமைக்க  திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய கௌரவத்தை வழங்கியிருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்ரனை தமிழ் தேசிய கூட்டமைபினரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்றும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கு காரணம் விஜயகலா மகேஸ்ரன் மீது வடபகுதி மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் கொண்டுள்ள அதிர்ப்திகொள்ள அவரது அடாவடித்தனங்களே காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்

இதனிடையே மக்களின் வருகை குறைவானதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அமைந்திருந்ததாகவும் இதனாலேயே தமிழ் மக்கள் இந்நிகழ்வை புறக்கணித்தாதகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்களும் சரி ஆட்சி மாற்றத்தினூடாக மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று ஏமற்றிவிட்டனர் என்றும் இதன்காரணத்தினால் தாம் பிரதமர் பங்கெடுத்த நிகழ்வை புறக்கணிக்க காரணம் என்றும் மக்கள் எம்மிடம் சுட்டிக்காட்டினர்.

நாடு முழுவதிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் நிதி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தைச் சேர்ந்த சிறு முதலீட்டாளர்கள் எவரும் எதுவித பயன்களையும் பெறவில்லை என்றும் இது ஒரு தரப்பினரது நலன்களுக்காகவே பயன்படுவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இன்றைய நிகழ்வு அவரது கூற்றை நிஜமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: