பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் அனுஷியா கோரிக்கை!

Friday, March 22nd, 2019

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையில் குறித்தவிடயத்தை முன்னிறுத்தி பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குள் இயற்கை வளமான பனை வளத்தை மூலதனமாகக் கொண்டு கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பையும் உருவாக்கவதற்கான நடவடிக்கைகளை எமது சபை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வதற்கான சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதை முழுமையாக கட்டுப்படுத்தப்பட முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரினங்களை அச்சுறுத்திவரும் இந்த பிளாஷ்டிக் பொருள் பாவனையை எமது பிரதேசத்தில் கட்டுப்படுத்தி எமது பிரதேசத்தின் இயற்கை சூழ்நிலையை பாதுகாக்க வேண்டியது எமது சபையின் கடமையாகும்.

இந்நிலையில் எமது பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பனம்பொருள் கைப்பணிப் பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதுவே இப்பெண்களில் பலருக்கு வாழ்வாதாரத்தின் பொருளாதாரமாக இருக்கும் நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பனம் பொருள் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் வடபகுதியில் புங்குடுதீவே முதன்மை பெறுகின்றது.

மேலும் எமது பகுதியில் உள்ள ஆலயங்களின் திருவிழா காலங்களில் பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை தடைசெய்வதனூடாக, அதற்கு மாற்றீடான பொருட்களை எமது பிரதேசத்தின் வளமான பனை வளத்திலிருந்து உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கும்; பல இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கி கொடுக்க முடியும்.

அந்தவகையில் வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்குள் உள்ள பொது நிகழ்வகள் மற்றும் ஆலய திருவிழாக்களில் பிளாஷ்ரிக் பொருள் பாவனையை தடைசெய்து அதற்கு மாற்றீடான உற்பத்தியை எமது பிரதேச வளமான பனை வளத்திலிருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள எமது சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இச்சபையில் ஒரு பிரேரணையை நான் முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்டபில் சபை உறுப்பினர்களால் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் வேலணை பிரதேசத்தின் இயற்கை வளமான பனைவளத்தை மூலதனமாகக் கொண்டு பிளாஷ்ரிக் பாவனைக்கு மாற்றீடாக குறித்த பனைசார் உற்பத்திகளை அதிகளவில் நடைமுறைக்க கொண்டுவருவதனூடாக எமது பிரதேச பெண்கள் மற்றும் பெண்களை குடும்பத்தலைமையாக கொண்டுள்ள பெண்களதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையாகவும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையை படிப்படியாக கட்டுப்படுத்த இது முதற்கட்டமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் சபையின் உறுப்பினர் பிரகலாதன் அவர்களால் குறித்த பிரேரணை வழிமொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: