தகவல்களை மறைத்த பட்டதாரிகள்: 104 பேர் வேலை இழப்பு!

Friday, August 2nd, 2019

ஏற்கனவே அரச பணியிலுள்ள விபரத்தை மறைத்து, பட்டதாரிகள் நியமனத்திலும் அவர்கள் அரச பணி பெற முயற்சித்துள்ள 104 பேர் சிக்கியுள்ளனர்.

நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கப்படுகிறது.யாழ் மாவட்டத்தில் 1,250 பட்டதாரிகள் இதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்களுள் 104 பேர் ஏற்கனவே அரச உத்தியோகத்தர்களாக பணபுரிவது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 4ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில், அவர்களில் 1250 பேருக்கே நியமனம் வழங்கப்படுகிறது.

இவ்வாறான நிலைப்பாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர், கடமையிலிருந்து கொண்டு இன்னொரு அரச நியமனத்தை பெறுவது தண்டனைக்குரிய குற்றம். முன்பு பணியாற்றும் அரச தொழிலை மறைத்து புதிய தொழிலை பெற்றமை கண்டறியப்பட்டால் குறித்த நபர் உடனடியாக பதவியிழப்பதோடு, அவர்களின் இரு அரச பதவிகளுமே இழக்கப்படும்.

அத்துடன் முதல் அரச பணியாற்றிய காலத்தில் பெற்ற சம்பளம் முழுவதும் மீளச் செலுத்தப்பட வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஏற்கனவே பதவியில் இருந்து கொண்டு, நியமனம் பெற முயற்சித்த 104 பேரும், நியமன பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: