சுகாதார அமைச்சு விடுத்துள்ளது அவசர எச்சரிக்கை!
Thursday, August 8th, 2019காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றுடனான காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெங்கு நோயின் முதற்கட்ட அறிகுறியான காய்ச்சல் வந்த நோயாளர்கள் சிலர், இதனை சாதாரண காய்ச்சல் என எண்ணி ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் போன்ற சில மருந்துகளை உட்கொண்டுள்ளனர்.
இதனால் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த நோயாளர்களின் நிலைமை தீவிரமடைந்துள்ளதுடன், அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அவசர எச்சரிக்கை அறிக்கையில்,அஸ்பிரின் (Aspirin), புருபன் (Ibuprofen), டைக்கிலோபெனாக் சோடியம் (Diclofenac sodium), மெபனமிக் அசிட் (Mefenamic acid) மற்றும் இந்த வகையை சேர்ந்த வேறு ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஸ்ரிரொயிட் வகையை சேர்ந்த மருந்துகளான பிறெட்னிசலோன் (Prednisolone), மீதைல் பிறெட்னிசலோன் (Methylprednisolone) மற்றும் டெக்ஸாமெத்தசோன் (Dexamethasone) ஆகிய மருந்துகளை காய்ச்சல் வந்தவர்கள் உட்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வைத்தியர்களின் பரிந்துரைகள் இன்றி இவ்வாறான மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|