சமூக வலைத்தள முறைகேடு: இதுவரை 162 முறைப்பாடுகள் பதிவு!

Friday, November 1st, 2019


சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு தொடர்பில் per.itssl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதுவரை 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் ஜனாதிபதி வேட்பாளருக்கு சேறு பூசும் விதமான பதிவுகள் தொடர்பில் 66 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பயன்படுத்தி போலியான சமூக வலைத்தளங்களை உருவாக்கிய சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும், ஜனாதிபதி வேட்பாளர்களை இலக்காக கொண்டு பகிரப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் 41 முறைப்பாடுகளும், குரோத கருத்துக்கள் தொடர்பில் 43 முறைப்பாடுகளும் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான இணையத்தளம் ஒன்று தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 139 முறைப்பாடுகள் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பிலும் 23 முறைப்பாடுகள் யூ டியூப் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் தொடர்பிலும் பதிவாகியுள்ளன.

விசேடமாக அதிகளவான சமூக வலைத்தள பயனாளர்கள் பொய்யான செய்திகள் மற்றும் குரோத கருத்துக்கள் அடங்கிய தகவல்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிர்வது அதிகரித்துள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

அமைதியான தேர்தல் ஒன்றை நடாத்துவதன் பொருட்டு சமூக வலைத்தளங்களில் குரோத கருத்துக்கள், பொய்யான செய்திகளை வௌியிடுதல் மற்றும் அவ்வாறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்தலை தவிர்ப்பது சமூக வலைத்தள பயனாளர்களின் பொறுப்பு என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: