கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து!

Friday, August 2nd, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யுமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் கோத்தபாய ராஜபக்ச விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

அமெரிக்கா – கலிபோனியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா குறிப்பிட்டார்.

அத்துடன், அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியிருந்தார். எவ்வாறாயினும், அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யக்கோரி கோத்தாபய அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3ஆம் திகதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரசியல்வாதிகளது  தவறுகளால்  வடக்கிற்கு ஒதுக்கப்படும்  பணம்  மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...
கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய...