குப்பை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!

Monday, August 19th, 2019

வைத்தியசாலைக் கழிவுகள் வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த மூவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் கழிவகற்றல் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களில், செவனகல, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வைத்தியசாலையின் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இது குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவகற்றல் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கழிவுகள் கொட்டப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அங்கு வைத்தியசாலைக் கழிவுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறியுள்ளார். இதனடிப்படையில், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக் கழிவுகளைப் புதைக்கவோ அல்லது களஞ்சியப்படுத்தவோ, எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் கழிவகற்றல் தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல் அவசியமாகும். எனினும், சில வைத்தியசாலைகள் அவ்வாறான அனுமதிப்பத்திரத்தை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts: