எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இரண்டு நாட்களில் தீர்வு – எரிவாயு நிறுவனங்கள்!

Thursday, October 24th, 2019


நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்வரும் இரண்டு நாட்களில் நிவர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலக சந்தையில் சமையல் எரிவாயு உற்பத்தி குறைவடைந்தமையினால் இலங்கையின் பல பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளன.

அண்மையில் சவுதி அரேபியாவில் எரிவாயு மற்றும் மசகு எண்ணை உற்பத்தி செய்யப்படும் மத்திய நிலையங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களால் உலக சந்தையில் எரிவாயுவின் உற்பத்தி 35 வீதமாக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது அந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய எதிர்வரும் இரண்டு நாட்களில் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் எனவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை சந்தையில் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைக்கும், மற்றும் அதிக விலையில் எரிவாயு சிலிண்டர்களை விற்னை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த விவசாய, கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு தட்டுப்பாடில்லாமல் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை வழங்கும் நோக்கில் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாவுக்கும் முட்டை ஒன்றை 17 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக விவசாய, கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: