இலங்கையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டம் ?

Thursday, August 29th, 2019

உள்ளூர் பயங்கரவாதிகள் சிலர் இலங்கையில் இரண்டாவது பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 பேர் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் குழுவாக இணைந்து இலங்கையில் இரண்டாவது பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவலில், தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத் மில்லதே இப்ராஹிம் ஆகிய தடை செயயப்பட்ட அமைப்புக்களில் செயற்பட்ட இந்த நபர்கள் “அபு” என்ற கௌரவ பெயரில் சஹ்ரானினால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயங்கரவாத வலையமைப்பினை மொஹமட் சஹ்ரான் “அபு உபய்தா” என்ற கௌரவ பெயரில் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உட்பட குழுவினர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதனை போன்று இந்த 18 பேரும் நுவரெலியா முகாமில், தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் பிரதான மத நிகழ்வுகளின் போது ஒரு நாளில், ஒரே நேரத்தில் 9 மாகாணங்களில் தாக்குதல் நடத்த இந்த குழு திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள இந்த 18 பேரும் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சஹ்ரானுக்கு பின்னரான இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்ட ஒருவரும் தற்போது குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நவுபர் மௌலவி என்பரும் இந்த 18 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 – 27 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. சிறந்த கல்வியை பெற்ற அவர்களில் இருவர் ஒலுவில் பாடசாலை மாணவர்கள் எனவும், மற்றுமொருவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: