இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்குக் குறையாமலும், இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அரசியலமைபபின் 31 ஆம் உறுப்புரையின் (3) ஆம் பந்தியானது தேவைப்படுத்துகின்றது.
அத்துடன், அரசியலமைப்பின் 104ஆ உறுப்புரையோடு சேர்த்து வாசிக்கப்படும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவு என்பவற்றால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்ககளை கொண்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்ப்பட்டுள்ளது.
இதற்கமைய, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளது.குறித்த தினத்தில் காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேநேரம், நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவது இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது.
குறித்த பணிகள் அடுத்த மாதம் 6ஆம் திகதி மதியம் 12 மணிவரையான அலுவலக நேரங்களில் இடம்பெறும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாவையும், சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை பொறுப்பேற்கும் காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி, முற்பகல் 11.30 வரையான காலப்பகுதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து 17 வேட்பாளர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயேட்சையாக முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|