இராணுவத்தின் மனிதாபிமானத்தை வடக்கு மக்கள் அறிவர் – இராணுவத் தளபதி!

இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான பணிகளை வடக்கிலுள்ள மக்கள் நன்கு அறிவார்கள். எவர் என்ன குற்றச்சாட்டை இராணுவம் மீது சுமத்தினாலும், உண்மையை வடக்கு மக்கள் அறிவார்கள் என தெரிவித்துள்ளார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.
கண்டியில் தலதா மாளிகை, மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
சில சில குற்றச்சாட்டுக்களை பற்றி பேசுகிறார்கள். யுத்தக் குற்றங்களை பற்றி பேசுகிறார்கள். இயற்கை நீதியென்று ஒன்று உள்ளது. இது தொடர்பில் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும். யுத்தக்குற்றச்சாட்டுக்கள் பற்றி பேசினாலும், எனது நாட்டுக்காகவே செயற்பட்டேன்.எனக்கு ஒப்படைக்கப்பட்ட கடமையை செய்தேன். நாட்டுக்காக உயிரையும் கொடுத்து கடமையை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன்.
வடக்கில் அரசியல்வாதிகள் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கிறார்களே என செய்தியாளர்கள் வினவியபோது,அவர்கள் வேறு பிரிவினர் அல்ல. எமது நாட்டின் ஒரு பகுதியினர். நாம் பயங்கரவாதத்திற்கு எதிராகவே செயற்பட்டோம்.
நாட்டின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பயங்கரவாத அமைப்பை அழித்து, அவர்களின் பிடியிலிருந்து மக்களை மீட்டோம்.அந்த மக்களிற்கு உணவளித்து, குடிநீர் அளித்து, இராணுவத்தினரின் உணவையும் அளித்து அவர்களை காப்பாற்றினோம்.அது அங்கிருந்தவர்களிற்கு தெரியும். யார் என்ன சொன்னாலும், அந்த மக்களிற்கு எல்லாம் தெரியும். நாட்டில் தேவையான இடங்களிலேயே இராணுவ முகாம்கள் உள்ளன. புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், தேவையான இடங்களிலேயே முகாம்கள் அமைத்துள்ளோம் என்றார்.
Related posts:
|
|