இணைப்பாளர்கள் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம் – சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!

Monday, September 23rd, 2019


ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி எனது இணைப்பாளர்கள் பணம் கேட்டால் கொடுக்கவேண்டாமென சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் இடம்பெற்ற ஜப்பானுக்குச் செல்வதற்கான இளைஞர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையிலல் –

பாடசாலை கல்வி முடிந்த பின்பு தொழிற்பயிற்சி கல்வி என்றொரு கல்வி முறைமை இருப்பதை நாம் அறிவோம். இதை பாடசாலை மட்டத்திலும் கொண்டுவந்து அனைவருக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசு திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகிறது.

டெங்கு ஒழிப்பு தொடர்பான தொழில் வாய்ப்புகள்கூட இனி இந்தத் தொழில் பயிற்சியை [NVQ] முடித்தவர்களுக்கே வழங்கப்படவுள்ளன.எங்களது சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.கடந்த அரசில் 10 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்புக்காக கொரியாவுக்கு அனுப்பப்பட்டனர். பிறகு பரீட்சைகள் மூலம் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் எங்களது அரசு எங்களது இளைஞர்,யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. NVQ ஐ பூர்த்தி செய்தவர்களுக்கே இது வழங்கப்படவுள்ளது.

இதற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் 420 இளைஞர்,யுவதிகளின் சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளேன்.ஆனால்,அமைச்சரிடமோ இதுவரை 400 பேர்தான் விண்ணப்பித்துள்ளார்களாம். எங்களது அரசு இளைஞர்,யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றது. அதில் ஒன்றுதான் இது.

ஜப்பானுக்குச் சென்றால் நீங்கள் 10 வருடங்கள் தொழில் புரிய முடியும்.முதற்கட்டமாக 10 ஆயிரம் பேரை ஒரே தடவையில் அனுப்பும் திட்டம் அரசிடம் உண்டு.இன்று நிறைய இளைஞர்கள் 15 இலட்சம் ரூபா கொடுத்துச் செல்கிறார்கள்.சிலர் திரும்பி வரும் நிலையும் உண்டு. ஆனால்,இதற்கு 15 இலட்சம் ரூபா கொடுக்கத் தேவையில்லை.முற்றிலும் இலவசம் NVQ தகுதி இருந்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: