வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களைத் தவிர வைத்தியசாலை அமைப்பை சிதைக்கும் திறன் எவருக்குமில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களைத் தவிர வைத்தியசாலை அமைப்பை சிதைக்கும் திறன் எவருக்குமில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர்களின் சேவை இனி வைத்தியசாலைகளுக்கு தேவையில்லையென தாம் பல முறை கூறி வருவதாக தெரிவித்த அவர், சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிபகிஷ்கரிப்பும் தோல்வியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உட்பட சுகாதாரத் தொழிற்சங்கங்க் நிபுணர்களின் நிபுணத்துவம் மாத்திரமே தேவையென வைத்தியர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சங்க போராட்டத்தின் விளைவாக அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சுமார் ஒரு லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் நான்கு நாட்களுக்கு அவர்களின் கொடுப்பனவுகளை இழக்க நேரிட்டது.

இதன் விளைவாக, அரசாங்கத்திற்கு 700 மில்லியன் ரூபா சேமிப்பிற்கு அவர்கள் பங்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க நடவடிக்கையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஏப்ரல் மாத புத்தாண்டில் வழங்கப்படும் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும், எனவும் குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு கொடுப்பனவுகள் குறைவாக கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் மேலும் இவ்வாறான இரண்டு அல்லது மூன்று தொழிற்சங்க போராட்டங்கள் இடம்பெறுமாயின் அரசாங்கம் அதிக பணத்தை சேமிக்கலாம்.

இதேவேளை, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில கொடுப்பனவுகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: