வைத்தியரை நியமிக்க கோரிப் போராட்டம்!

Wednesday, August 8th, 2018

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மேலதிக நடவடிக்கை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு உரிய  முறையில் வைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை. அங்கு நீண்டகாலம் சேவையில் உள்ளவர்களுக்கும் உரிய காலப்பகுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இது மோசமான நிலையாகும்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் அமைச்சுக்கும் அறிவித்தும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

எனினும் நோயாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாதவாறு அங்குள்ள சொற்ப வைத்தியர்களால் இதுவரை வழங்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் எமது தாய் சங்கத்தின் ஊடாக பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கும் மத்திய சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம். இதனால் சில நடவடிக்கைகள் தற்போது நடக்கின்றன. குறிப்பாக இடமாற்றம் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து வரவைப்பதாக அவ்வைத்தியசாலை பொறுப்பதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை முழுமையாக நிவர்த்தி செய்ய எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம்.

அதற்கிடையில் வைத்தியர் தேவை நிறைவேற்றப்படாவிட்டால் அடையாள பகிஷ்கரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போராட்டத்திற்கும் உரிய பலன் கிடைக்காவிட்டால் மேலதிக நடவடிக்கை தொடரும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்க வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டிபன் தெரிவித்தார்.

Related posts: