வேள்வித் தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!

Thursday, July 18th, 2019

சைவ ஆலயங்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று (18) வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுவதை தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்த நிலையில், அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கி தீர்ப்பில் இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: