வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் முறையாக நிறைவேற்றப் படாமையால் மக்களும் அரசாங்கமும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தாழ்வான் பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றமைக்கு தீர்வு வழங்கும் வகையிலான கலந்துரையாடலின் போதே துறைசார் அதிகாரிகளிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் பூர்த்திசெய்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு தீர்மானத்திற்கு வரவேண்டும்.
அதேநேரம் மக்களுக்கு அவ்வாறு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒதுக்கீடுகளை உரிய முறைகளுக்கு அமைய பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் மழை நீர் வடிந்தோடும் கால்வாய்களை சுத்திகரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் அத்துடன் புதிய நீர் உந்தி நிலையங்கள் மூலம் தண்ணீரை அகற்றுவது மற்றும் தாழ்வான பகுதிகளில் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத வகையில் குடியமர்த்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியிருந்தார்.
அத்துடன் வெள்ளத்தினால் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.
மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி சரியான முறைகளின் மூலம் வெற்றிகரமாக வேலைத்திட்டங்களை செயற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பல்வேறு அரச நிறுவனங்களுக்காக புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் ஊழியர்கள் நாட்டின் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|