வேலணை மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண் – முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு!

Thursday, January 20th, 2022

சுகயீனமடைந்த நிலையில் வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி வடக்கின் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –  கடந்த 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா திருவருள் என்ற குடும்பப் பெண் திடீர் சுகவீனம் உற்ற நிலையில் வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வேலணை வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத நிலையில் அம்புலன்ஸ் சாரதியும் குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்திருக்கவில்லை எனவும். இதனால் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தன் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழு அமைக்கப்பட்ட நிலையில் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை இடம்பெறும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்கள், பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக குற்றம் சுமத்திவருகின்றனர்.  

கிளினிக் செல்லும் நோயாளர்கள் மருத்துவரிடம் செல்வதற்கு முதல் தமது ரிக்கட் எடுக்க வேண்டும். இதற்காக ரிக்கெட் எடுக்கச் சென்றால் ரிக்கட் வழங்கும் அறையில் யாருமற்று, ரிக்கட் வழங்குபவர் வரும்வரை நோயாளர்கள் அங்கு மணி கணக்கில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்படுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருகின்றவர்கள் எங்கே மருத்துவச் சான்றிதழ் எடுப்பது என்று தெரியாமல் வைத்தியசாலையையே சுற்றி வரும் நிலையும் காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

எனவே தற்போதைய கொரோனா காலத்தில் இந்த விடயம் குறித்து உரியவர்கள் கவனம் எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: